Shadow

பாவாணர் கோட்டக் குறிக்கோள்

பாவாணர் சீயோன்மலை- முரம்பில் வாழ்ந்த வரலாற்றைப் பதிவு செய்துள்ளதை- நினைவுக்கோட்டம் அமைத்துள்ளதைப் பொதுமக்களுக்கும், உலகெங்கும் உள்ள பாவாணர் பற்றாளர்களும் தெரியச் செய்வது. அவரின் வாழ்வியல் நிகழ்வுகளையும், ஆய்வுகளையும் செயல்பாடுகளையும் தெரிவித்துத் தமிழ்ப்பற்றை ஊட்டி வளர்ப்பது.

தனித்தமிழியக்கத்தைக் கட்டிக் காத்த மறைமலையடிகள், பாவாணர், பெருஞ்சித்திரனார் பிறந்த நாள்களையும், மறைந்த நாள்களையும் விழாக்களின் மூலம் வெளிப்படுத்துதல், வெளியீடுகள் மூலம் வெளிப்படுத்துதல். குறுநூல்கள் வெளியிடுதல்.

பத்துச் சிற்றூர்களில் தமிழ் மன்றங்கள் அமைத்துத் தமிழியல் பயிற்சி வகுப்புகள் நடத்துதல். மொழியின நாட்டுரிமை காத்தல், தமிழ்பண்பாட்டைப் பேணிக் காத்தல், தேவநேயம் பரப்புதல், கல்லூரி நிறுவுதல். 

ஆட்சிமுறை – நடத்தும் முறை

தலைமைப் பொறுப்பாளர்கள் ஆறுபேரும், பாவாணர் கோட்ட உறுப்பினர்கள் முப்பது பேரும் உள்ளனர். ஆட்சிப் பொறுப்பாளர், தலைவர், செயலாளர், பொருளாளர், ஒருங்கினைப்பாளர், கணக்காய்வாளர் அறுவரும் மூன்று திங்களுக்கொருமுறை கூட்டம் போட்டு வளர்ச்சிப் பணிகளை ஆய்வு செய்து தீர்மானப்படி செயல்படுகின்றனர். உறுப்பினர்கள் ஆண்டுக்கொருமுறை கூட்டம் கூடித் தலைமைப்பொருப்பாளர்கள் ஏற்றுக் கொண்ட திட்டங்களையும் தீர்மானங்களையும் ஆய்வு செய்து ஒப்புதல் வழங்குகின்றனர்.

பாவாணர் கோட்டத்தின் அசையாச் சொத்துக்கள் பாவாணர் கோட்ட ஆட்சிப் பொறுப்பாளர் பெயரிலும் நன்கொடை வங்கி வைப்பும், நிலைவைப்பும் ஆட்சிப் பொறுப்பாளர்-பொருளாளர் கூட்டுக் கணக்கில் வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. நிகழ்சிகள்

  1. பாவாணர், மறைமலையடிகள், பெருஞ்சித்திரனார் பிறந்த நாள் விழாக்கள்,
    கருத்தரங்குகள் நடைபெறுகின்றன.
  2. தமிழியல் பயிற்சி வகுப்பொன்று நவம்பர் 27ஆம் நாள் கல்லூரி அளவில் பயிலும் மாணவர்களுக்கு நடத்துதல், சான்றிதழ், நினைவுப்பரிசு, பாராட்டுப்பரிசு வழங்குதல்.
  3. தூய தமிழ் சொற்பொழிவாளர்களைப் பயன்படுத்தி பட்டிமண்டபம், வழக்காடு மன்றம், பாட்டரங்கம், கருத்தேற்றக் கருத்தரங்கம் நடத்துதல்.
  4. பாவாணரின் பாடல்களைப் பாடும் இசையரங்கம் ஏற்பாடு செய்தல், தமிழுறவுச் சுற்றுலா நடத்தி வருதல்.
  5. பாவாணர் வாழ்க்கை வரலாற்று வில்லிசை நடத்துதல்.
  6. பாவாணர் கொள்கை பரப்புநர் விருது, பாவாணரியல் ஆய்வாளர் விருது வழங்குதல்.
  7. மாணவ மாணவிகள் பங்கேற்கும் எட்டுத் தமிழியல் போட்டிகள் நடத்துதல்.
  8. மொழி, இனம், பண்பாடு காக்கும் ஆர்பாட்டங்கள், பேரணி நடத்துதல்.

தொடர்புக்கு

பாவாணர் கோட்டம்
223/2, பாவாணர் கோட்டச் சாலை
சோழபுரம் தெற்கு – 626 139,(வழி) இராசபாளையம், தமிழ்நாடு.